சாத்தூர் அருகே பாட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னகாமன் பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில்,
சீனி பட்டாசு தயாரிக்கும் பகுதிக்கு அருகே உள்ள குடோன் ஒன்றில் சல்பர் மற்றும் அம்மோனியம் மருந்துகள் நிரப்பப்பட்டிருந்தன. அந்த குடோனில் நேற்று திடீரென தீப்பற்றி மருந்துப் பொருட்களில் தீப்பிடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறியது. இதில் பாண்டியராஜன், கார்த்தி, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க தொழிற்சாலையில் வேலை பார்த்த 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் இதுகுறித்து காவல் நிலையத்திலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் சாத்தூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.