நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 , 30 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக 27 மாவட்டங்களில் இந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்க கூடிய 9 மாவட்டங்களுக்கு விரைவிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் தற்போதுவரை நகர்ப்புற மற்றும் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தவில்லை.
உடனடியாக இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பிருக்கிறது.
திமுக சார்பில் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே அமர்வு முன் முறையிடவும் திமுக சார்பில் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் அந்த மனுக்களுடன் சேர்த்து திமுக சார்பில் இன்றைய தினம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.