கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒரு சித்தர் உருவாகியுள்ளார். இவரை நெடுஞ்சாலை மற்றும் மலைக்கோவிலூர் சித்தர் என்று அழைக்கின்றனர். இந்த சித்தர் உடலில் ஆடை ஏதும் அணியாமல் நிர்வாண கோலத்தில் உடல் முழுதும் விபூதியை பூசியுள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அங்குள்ள வேப்ப மரத்தின் கீழ் தங்கி இருக்கிறார். கடந்த 8 வருடங்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சித்தர் யாரிடமும் பேசாமல் சுற்றித் திரிந்துள்ளார்.
அதன் பிறகு தான் வேப்ப மரத்திற்கு அடியில் கடந்த ஒரு வருடமாக இருக்கிறார். இவரை பார்ப்பதற்கு கரூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வருகின்றனர். அப்படி வருபவர்கள் சித்தருக்கு உணவு, தண்ணீர் பாட்டில், தேங்காய் பழம் போன்றவற்றை கொடுக்கின்றனர். ஆனால் அவற்றை எல்லாம் சித்தர் வாங்காமல் தூக்கி எறிந்து விடுகிறார். அதற்கு பதில் தன்னை தேடி வருபவர்களுக்கு விபூதியை பிரசாதமாக கொடுக்கிறார். இந்நிலையில் சித்தரின் முன்பு எப்போதும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்றவைகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது.
இவரைப் பற்றி அருகில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்த போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த சுப்பிரமணி எனவும், குடும்ப பிரச்சனையின் காரணமாக பல வருடங்களுக்கு முன்பாக இப்பகுதிக்கு வந்ததாகவும் கூறுகின்றனர். அதோடு வெயில், மழை, காற்று போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் வேப்ப மரத்தின் அடியில் தான் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். மேலும் சித்தரை காண வரும் பொதுமக்கள் தங்களுக்கு நல்லது நடப்பதாகவும், சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வதாக உணர்வதாகவும் கூறுகின்றனர்