Categories
மாநில செய்திகள்

ஆம்புலன்ஸ் வருகையை அறிய விரைவில் மொபைல் செயலி & 200 புதிய ஆம்புலன்ஸ்கள் : அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஆம்புலன்ஸ் வருகையை அறிய விரைவில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் பல இடங்களில் ஆம்புலன்ஸ் விரைவில் வருவதில்லை என்று தொடர்ச்சியாகப் பல புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது தி.மு.க. உறுப்பினர் சண்முகையா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது ஆம்புலன்ஸ் விரைவாகத் தான் வருகிறது. மாநகராட்சியில் 8 நிமிடங்களிலும், கிராமங்களில் 13 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களிலும் சென்று விடுகிறது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து மக்கள் ஆம்புலன்ஸ் எவ்வளவு நேரத்தில் வரும் என்பதைத் துல்லியமாகக் கண்டுகொள்ள பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் இரண்டு மாதத்தில் அமல்படுத்த உள்ளது என்றும் கூறினார்.

மேலும் ஒரு மருத்துவமனையில் இருந்து வேறொரு மருத்துவமனைக்குச் செல்வதற்கும், ஆம்புலன்ஸ் விரைவாக மக்களிடையே சென்றடைவதற்காகவும் 200 புதிய ஆம்புலன்ஸ் இயக்கப்பட உள்ளது என்றும் 108 ஐ தவிர மற்றொரு எண் மூலமும் ஆம்புலன்ஸை அழைக்கும் படி செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயலியில் ஆம்புலன்ஸ் வரும் பாதை, ஓட்டுநரின் அலைபேசி எண் உள்ளிட்டவை தெரியும் வகையில் 2 மாதத்தில் ‘செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.

Categories

Tech |