உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே அழைத்து சென்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பேசும்போது புல்கித் ஆர்யா மற்றும் இளம்பெண் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புல்கித் இளம் பெண்ணை கொன்று அங்கிருந்த ஒரு கால்வாயில் வீசியுள்ளார். இதற்கு ரிசாட்டில் வேலை செய்யும் 2 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த இளம்பெண்ணை ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, மேலாளர் சௌரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கீத் குப்தா ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இளம் பெண்ணை கொலை செய்த 3 பேரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உத்திர பிரதேச மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இளம் பெண் மரணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டை இடிப்பதற்கு உத்தரவிட்டார். இருப்பினும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜக கட்சியில் இருந்து வினோத் ஆர்யா மற்றும் அவருடைய மகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இது தொடர்பாக வினோத் ஆர்யா தற்போது செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய மகனுக்கும் இளம் பெண்ணின் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இளம்பெண்ணின் கொலை வழக்கில் உண்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் கட்சியிலிருந்து விலகி விட்டேன். என்னுடைய மற்றொரு மகனும் கட்சியிலிருந்து விலகி விட்டார். எனது மகன் புல்கித் குற்றம் அற்றவர். அவருக்கு ஒன்றுமே தெரியாது, மிகவும் நல்லவர். என்னுடைய மகன் எப்போதும் வேலையில் மட்டும் தான் கவனமாக இருப்பார். மேலும் என்னுடைய மகனுக்கும் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.