பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழி சாலை அருகே இருக்கும் கந்தசாமிபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கந்தசாமிபுரம் தனியார் பள்ளி பின்புறம் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பித்து ஓடியது.
இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று 9 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தை சேர்ந்த மணிராஜ், ரமேஷ், மோகன்ராஜ், விஜய், மேக்டவுன், நாராயணன், அருண்குமார், மூமின், மணிகண்டன் என்பதும் அவர்கள் விற்பனைக்காக இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனால் மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் 9 பேரை கைது செய்து சொகுசு கார், மோட்டார் சைக்கிள் கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள்.