திருச்சி அருகே வாரசந்தையை நீக்கக்கோரி காய்கறி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட கடைகளில் 126 காய்கறி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் தங்களது வியாபாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென வாரசந்தை என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தின் தெப்பக்குளம் பகுதிகளிலும், கீதா புரத்திலும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இரண்டு நாட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் ஸ்ரீரங்கம் பிரகாரத்தில் கடை வைத்துள்ள 126 வியாபாரிகளின் வாழ்வாதாரம் வியாபாரம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தொழில் செய்வது அவரவர் உரிமை. இதில் தெப்பக்குளம் பகுதி அரசு பொது இடம். அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுக்க முடியாது. அதே போல் கீதா புரத்தில் கடை வைத்திருப்போர் தனியார் நிலத்தில் கடை வைத்திருக்கிறார்கள். அங்கு எந்தவித நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்க முடியாது என்று தெரிவித்தனர். பேச்சுவார்த்தை தங்களுக்கு சாதகமாக அமையாததால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.