திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்து வயது மகளுடன் வந்த 7 மாத கர்ப்பிணி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி அபிராமி. இவர் தனது 5 வயது மகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் ஏழு மாத கர்ப்பிணி ஆக இருக்கின்றார். இந்நிலையில் குழந்தையுடன் அபிராமி ஆட்சியர் அலுவலகத்தின் போர்ட்டிகோ பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து குறைத்தீர் கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்துச் சென்றார்கள். அவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, நானும் முருகனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை இருக்கின்றது.
தற்பொழுது நான் 7 மாத கர்ப்பிணியாக இருக்கின்றேன். திருமணம் ஆனதிலிருந்து குடிபோதையில் வரும் கணவர் அடிக்கடி என்னை அடித்து வீட்டைவிட்டு வெளியே விரட்டி விடுகின்றார். மீண்டும் சேர்த்துக் கொள்வார். சென்ற 11-ம் தேதி தகாத வார்த்தைகளால் பேசி மீண்டும் தன்னை வெளியேற்றியுள்ளார். இது குறித்து பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தேன். அங்கும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் என் கணவர் மறுமணம் செய்யப் போவதாக தெரிகின்றது. என் பெற்றோரும் என்னை ஏற்கவில்லை. நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் நான் என் பெண் குழந்தையுடன் எங்கு செல்வது என தெரியவில்லை. ஆகையால் எங்கள் நிலையை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கின்றது. இதையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதாக கூறியுள்ளார்கள்.