சட்ட விரோதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பீஹார் மாநில இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
வேலூர் மாவட்டத்தில் தனியார் ரயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் ஐஆர்சிடிசி சாப்ட்வேருக்குள் நுழைந்து சட்ட விரோதமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை 200 முதல் 500 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ரயில் பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சென்ற 7-ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வேலூரில் சோதனை மேற்கொண்டார்கள்.
அப்பொழுது முறைகேடாத ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த ஐந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் இரண்டு கடைகளில் சட்ட விரோதமான மென்பொருள் பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மென்பொருளை விற்பனை செய்வது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பிகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சட்ட விரோதமாக மென்பொருளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து எட்டு பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சட்டவிரோதமாக மென்பொருளை விற்பனை செய்த இளைஞரை பிடிப்பதற்காக சென்ற 9-ம் தேதி பீகாரருக்கு சென்றார்கள். 20-ம் தேதி பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் யாதவ் என்பவரை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்கள்.
இவர்கள் இந்த சட்ட விரோதமான இணையதள மென்பொருள் மூலம் நாடு முழுவதும் 3485 பேரிடம் 2000 முதல் 3500 வரை விற்பனை செய்து 18 மாதத்தில் 98 லட்சத்து 20 ஆயிரத்து 946 கிடைத்திருக்கின்றது. இதில் மென்பொருளை உருவாக்கித் தந்தவருக்கு 30 சதவீதம் கமிஷன் கிடைத்திருக்கின்றது. இதில் சைலேஷ் யாதவிற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் சென்ற மாதம் கிடைத்திருக்கின்றது. சட்டவிரோதமாக மென்பொருளை விற்பனை செய்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.