கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோவை மாவட்ட கூடுதல் தலைமைச் செயலாளர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்க வசதியாக 178 எம்.எல்.டி குடிநீர் எடுக்க பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் தண்டி பெருமாள்புரம் பகுதியில் 104 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வடிவமைப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நேற்று முன்தினம் கோவை வந்தடைந்தார். பின் அவர் அங்கு நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். கோவையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பாகவே மார்ச் மாதத்திற்குள் இந்த திட்டப் பணிகளை முடித்து அனைத்து மக்களுக்கும் சீரானமுறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். ஆகையால் அதற்கு ஏற்றவாறு இந்த பணிகள் அனைத்தையும் தரமாகவும் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.