ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடனானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம். இந்த கொலை வழக்கை முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வேறு சில விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை தொடர்பாக பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க சுவரொட்டிகளை போலீசார் பல்வேறு மாவட்டங்களில் ஒட்டியிருந்தனர். கோவையில் உள்ள காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில், காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகை ஒட்டி இருந்தனர். கொலை சம்பவம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது மட்டுமில்லாமல் ராமஜெயத்தின் கொலைக்கு பயன்படுத்திய காரின் உடைய மாடல் மாருதி சுசுகி வர்ஷா மாடல் என்பதை உறுதி செய்து, வர்ஷா கார் உரிமையாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் 1400 பேர் வர்ஷா கார்கள் வைத்திருக்கும் நிலையில் கோவையில் மட்டும் 250 வர்ஷா கார்கள் உள்ளன. அவர்களிடம் இந்த சிறப்பு குழு தீவிர விசாரணை நடத்தி தொடர்ந்து தடயத்தை சேகரித்தார்கள்.
இதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை முன்னாள் எம்எல்ஏ எம் கே பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சொல்லப்படும் திண்டுக்கல் மாவட்டச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய இருவரிடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் பல முக்கிய கொலை வழக்குகள் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராமஜெயத்தின் கொலை வழக்கு விசாரணையானது சூடு பிடித்திருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.