நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது. அதில் ஒன்றான நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமான பணி தொடங்கப்பட்டு இன்னும் நிறைவடையாமல் அரைகுறையாக நிற்கின்றது. சென்ற நான்கு வருடங்களாக இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.
பூமிக்கு அடியில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக தோண்டியபோது மழை நீர் தேங்கியதால் கட்டுமானம் கிடைப்பில் போடப்பட்டது. இதன் பின்னர் ஒரு வருடம் கழித்து 2019 ஆம் வருடம் மீண்டும் பணிதொடங்கப்பட்டது. பின்னர் வேகமாக பணிகள் நடைபெற்றது. இதில் கீழ்த்தளம், தரைத்தளம் என மூன்று தளங்கள் கட்டி முடிக்கப்பட்டது. பல பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பேருந்து நிலையம் கட்டுமானம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் பணி முடங்கி போய் உள்ளது.
இதனால் பயணிகளும் பொதுமக்களும் சந்திப்பு பேருந்து நிலைய பணிகளை முழுமையாக முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்கள். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமான பணி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதை விரைந்து முடித்து பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட பிறகு பேருந்து நிலையம் திறக்கப்படும் என கூறியுள்ளார்கள். இதனால் பொதுமக்கள் பேருந்து நிலையம் திறப்பு விழா காண்பது எப்போது என எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள்.