தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சலுகைகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படிப்படியாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை, சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆனது 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தற்போது நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. இவர்கள் பொது மாறுதல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
அதோடு அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தல், சிலிண்டருக்கான முழு தொகையையும் அரசு ஏற்றல், அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்ற நடவடிக்கை எடுத்தல், ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தின் காரணமாக அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.