மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனிமையில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி-சரண்யா தம்பதியினர். பாலாஜி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சரண்யா கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாலாஜி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாலாஜி குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வாடகை வாங்குவதற்காக வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்போது பாலாஜி உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கப் பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பாலாஜி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.