கோவை மாநகராட்சியின் திமுக மேயராக பதவி வகித்து வருபவர் கல்பனா ஆனந்தகுமார். மேயர் பதவிக்கு கட்சியின் சீனியர்கள் நிர்வாகிகள் என பலரும் முயற்சித்த நிலையில் எளிய குடும்ப பின்னணியை கொண்ட கழகத் தொண்டரின் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு போதிய பயிற்சி பெறும் வகையில் மேயர்களுக்கு பயிற்சி பட்டறை வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு கோவை மேயர் கல்பனா சிறப்பான முறையில் கற்று அறிந்தார். இதனையடுத்து களப்பணியில் தீவிரம் காட்ட தொடங்கினார். புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதில் ஆகட்டும், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு முடக்கி விடுவதில் ஆகட்டும், அதிகாரிகளை அலெர்ட் செய்வதில் ஆகட்டும் மேயர் செயல்பாடுகள் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார். தாமதம் ஏற்படுத்தினால் சிக்கலாகிவிடும். அப்புறம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிடுடாதீர்கள் என்று குறிப்பிட்டார். அப்போது துணை மேயர் ரா. வெற்றி செல்வன், மாநகர பொறியாளர் அரசு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர். அதன்பிறகு மேயர் கல்பனா நேற்று இரவு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து நேரடியாக மேற்கு மண்டலத்திற்கு புறப்பட்ட மேயர் வார்டு எண் 34க்கு சென்றார். அங்கு தடாகம் சாலையில் பில்லூர்-||| திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலையை பார்வையிட்டார். பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் குழாய் பறிக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.