இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகியுள்ளது. இந்த பண்டிகை வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களிலும் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவர். இதில் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களுக்கு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் வழிபடுவர்.
இந்த நவராத்திரி பண்டிகையின் போது அனைத்து மக்களுக்கும் வேண்டிய சொர்க்கம், வீடு பேறு அடைதல், ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நிலையான இன்பம், தனம், தானியம் போன்றவற்றை பெரும் நோக்கில் விரதம் இருந்து பண்டிகையை கொண்டாடுவர். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையை கொண்டாடும் விதமாக கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து மக்கள் வழிபடுவர். இதனையடுத்து நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களிலும் தேவியை வழிபடும் முறை மற்றும் பூஜை குறித்து தற்போது பார்க்கலாம்.
1. நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் அம்பிகையை மகேஸ்வரி தேவியாக நினைத்து வழிபட வேண்டும். இந்த நாளில் வெண்பொங்கல் வைத்து காலை 10:30 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் 7:30 மணிக்குள்ளும் வணங்க வேண்டும். அதோடு அரிசி மாவினால் கோலம் போட்டு மல்லிகை பூவினால் பூஜிக்க வேண்டும்.
2. நவராத்திரி பண்டிகையின் 2-ம் நாளில் அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக நினைத்து வழிபட வேண்டும். அதன்பின் மாவினால் கோலம் போட்டு நீல சம்பங்கி, சாமந்தி, மஞ்சள் நிற கொன்றை, துளசி, முல்லை போன்ற மலர்களால் பூஜை செய்து புளியோதரை படைத்து வழிபடலாம்.
3. நவராத்திரி பண்டிகையின் 3-ம் நாளில் அம்பிகையை வராகி தேவியாக நினைத்து வழிபட வேண்டும். அதன்பின் மலர் கோலம் போட்டு செண்பக மொட்டு மற்றும் குங்குமத்தால் பூஜித்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.
4. நவராத்திரி பண்டிகையின் 4-ம் நாளில் அம்பிகையை மகாலட்சுமியாக நினைத்து படி கோலம் இட்டு ஜாதி பூக்கள், ரோஜா, செந்தாமரை போன்ற மலர்களால் பூஜித்து பால் பாயாசம் படைத்து வழிபாடலாம்.
5. நவராத்திரி பண்டிகையின் 5-ம் நாளில் அம்பிகையை மோகினியாக நினைத்து கடலை மாவால் பறவை கோலம் போட்டு கடம்பம் மற்றும் மனோரஞ்சிதம் பூக்களால் பூஜித்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.
6. நவராத்திரி பண்டிகையின் 6-ம் நாளில் அம்பிகையை சண்டிகா தேவியாக நினைத்து கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட்டு கொங்கம், சம்பங்கி, செம்பருத்தி, விபூதி பச்சை மற்றும் பாரிஜாதம் போன்ற பூக்களால் பூஜித்து, தேங்காய் சாதம் படைத்து வழிபடலாம்.
7. நவராத்திரி பண்டிகையின் 7-ம் நாளில் அம்பிகையை சாம்பவி துர்கையாக நினைத்து சுமங்கலியாக கருதி முல்லை, மல்லிகை, தாழம்பூ, தும்பை போன்ற மலர்களால் பூஜித்து எலுமிச்சை சாதம் படைத்து வழிபடலாம்.
8. நவராத்திரி பண்டிகையின் 8-ம் நாளில் அம்பிகையை நரசிம்ம தாரணியாக கருதி பத்ம கோலம் போட்டு குருவாட்சி, வெண்தாமரை, சம்பங்கி மற்றும் மருதோன்றி பூக்களால் பூஜித்து புளியோதரை படைத்து வழிபடலாம்.
9. நவராத்திரி பண்டிகையின் 9-ம் நாளில் அம்பிகையை சுபத்ரா தேவி மற்றும் பரமேஸ்வரியாக நினைத்து வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலமிட்டு வெள்ளை மலர்கள், துளசி, மரிக்கொழுந்து, தாமரை போன்ற மலர்களால் பூஜித்து சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடலாம்.