உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்கத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 889 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாடுமுழுவதுமாக இந்த வைரஸ் பாதிப்பிற்கு இதுவரையில் மொத்தம் 75,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 411 பேர் தொற்றுநோயின் மையப்பகுதியான ஹூபே மாகாணத்திலிருந்து வந்தவர்கள் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், மேலும் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.