தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த வேணு கோபால் என்பவர் சென்ற 1995ஆம் வருடம் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து பல தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவருக்கு ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்து வந்ததாக தெரிகிறது. அதன்பின் தொழிலாளர் ஆணையம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்று ஓய்வூதிய உரிமையை பெற்றார். அதே நேரம் இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்தது. எனினும் 2 கோர்ட்டுகளும் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளூபடி செய்தது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக மீண்டும் சென்னை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் இவ்வழக்கில் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது “இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மீண்டும் மேல் முறையீடு மனுதாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு ரூபாய்.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என அந்த அமர்வு உத்தரவு பிறப்பித்தது.