தமிழகத்தில் தற்போது திமுக கட்சி உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் கணவருக்கு தற்போது புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் திமுக கட்சிக்காக பல்வேறு ஆண்டுகளாக உழைத்து வந்தாலும் பெரிய அளவில் எந்த பதவிகளிலும் வகிக்கவில்லை. இருப்பினும் திமுக கட்சியில் மூத்தவராக கருதப்பட்ட ஆனந்த குமாரை கட்சியில் இருப்பவர்கள் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்தது. இந்த சூழலில் ஆனந்த குமாரின் மனைவி கல்பனாவிற்கு முதல்வர் ஸ்டாலின் மேயர் பதவியை கொடுத்தார்.
கோவை மாவட்ட மேயராக கல்பனா பதவியேற்றதிலிருந்து அவருடைய கணவர் ஆனந்தகுமார் எல்லா விஷயங்களிலும் தலையிடுவதாக சமீபத்தில் சர்ச்சை வடித்தது. இருப்பினும் அதை பெரிதாக கண்டுகொள்ளாத பட்சத்தில் தற்போது கோவை மாநகர் மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆனந்தகுமார் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடன் இருந்தார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஆனந்த குமாருக்கு பதவி கிடைத்ததற்கு முக்கிய காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மேயர் கல்பனா நல்ல பெயரை பெற்றுள்ளார்.
இதனால்தான் கல்பனாவின் கணவர் ஆனந்த குமாருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதோடு தற்போது கோவை மாவட்டம் மூன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நா. கார்த்திக்கும், வடக்கு மாவட்ட செயலாளராக தொண்டாமுத்தூர் ரவியும், தெற்கு மாவட்ட செயலாளராக தளபதி முருகேசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், அவை தலைவர், துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.