லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் குளத்தில் இருந்து மண் அள்ளி வந்து தனது விவசாய நிலத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக பெருமாள்சாமி கனிமவளத்துறையினரிடம் சென்று மண் அள்ளுவதற்கு அனுமதி தருமாறு கேட்டுள்ளார். அப்போது குளத்தின் மண்ணை பரிசோதனை செய்து அறிக்கை தந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெருமாள்சாமி ரெட்டியார்சத்திரத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மண் பரிசோதனை செய்வதற்கு சென்றுள்ளார்.
அங்கு கட்டிடவியல் துறையில் உதவி பேராசிரியராக ரமேஷ்பாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் மண்ணை பரிசோதனை செய்து அறிக்கை தருவதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருமாள்சாமி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பெருமாள்சாமி ரமேஷ் பாண்டியனிடம் கொடுத்துள்ளார். அப்போது விவசாயி போல வேஷ்டி சட்டை அணிந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமேஷ் பாண்டியனை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ரமேஷ் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.