பிரான்சில் கீழ்க்கண்டவற்றுள் எதையாவது நீங்கள் செய்வீர்களானால், 30 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற உங்களுக்கு உத்தரவிடப்படும்.
பிரான்ஸ் அல்லது ஷெங்கன் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்திருந்தால், உங்களிடம் குடியிருப்பு உரிமம் அல்லது விசா இல்லையென்றால், உங்களால் பிரான்ஸ் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல், அல்லது தப்பியோடும் அபாயம் உள்ளது என தெரிந்தால், உடனடியாக நீங்கள் பிரான்சிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்படுவீர்கள். நீங்கள் பிரான்சுக்கு சட்டப்படி வந்திருந்தாலும், உங்கள் விசா காலம் முடிந்த பின்பும் நீங்கள் பிரான்சில் தங்கியிருந்தாலோ அல்லது ஷெங்கன் பகுதிக்குள் 180 நாட்களில், செல்லத்தக்க குடியிருப்பு உரிமம் இல்லாமல் 90 நாட்கள் வரம்புக்கு மேல் தங்கியிருந்தாலோ, நீங்கள் பிரான்சிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்படுவீர்கள். உங்கள் குடியிருப்பு உரிம விண்ணப்பம் அல்லது தற்காலிக குடியிருப்பு உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தாலோ, அதற்குப் பின், உங்களுக்கு பிரான்சில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
நீங்கள் குடியிருப்பு உரிமத்தை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கத் தவறினாலோ, உங்கள் முந்தைய உரிம காலாவதியான பின்னும் பிரான்சில் தங்கினாலோ, உங்கள் நாட்டிலிருந்து பிரான்ஸ் வர விசா தேவையில்லை என்னும் நிலை இருந்தால், கூடுதலாக 90 நாட்கள் நீங்கள் பிரான்சில் தங்கலாம். அப்படிச் செய்யலாம் என்றாலும், நீங்கள் ஷெங்கன் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டு, பின்னர் மீண்டும் திரும்பிவர வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு புகலிடக்கோரிக்கையாளராக இருந்து, உங்கள் பாதுகாப்புக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்குமானால், அல்லது நீங்கள் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர் என வகைப்படுத்தப்பட்டால், நீங்கள் பிரான்சிலிருந்து வெளியேற்றப்படலாம்.
இது போக, ஒருவர் பலதார மணம் செய்தவர், போதை கடத்தல், கொலை முதலான பயங்கர குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர், வெளிநாட்டவர் ஒருவரை சட்டவிரோதமாக பணிக்கமர்த்திருப்பவர், இதற்கு முன் பிரான்ஸ் பிராந்தியங்களிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் அல்லது தடை செய்யப்பட்டவர், சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் என்றாலும் அவர் நாடு கடத்தப்படலாம். உங்களிடம் குடியிருப்பு அனுமதி அட்டை இருந்தாலும், 10 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை நீங்கள் பிரான்சுக்கு வெளியே தங்கியிருந்தீர்களானால், உங்களிடம் இருக்கும் அட்டையின் வகையைப் பொருத்து நீங்கள் உங்கள் வாழிட உரிமையை இழக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.