திமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்க்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி சமீபத்தில் நடைபெற்ற 15வது தேர்தலில் மாநகர, மாவட்ட அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் அதிகாரப்பூர்வ பட்டியலை திமுக தலைமை வெளியிட்டது. இதில் முக்கியமாக திமுகவில் உச்சப் பதவியாக கருதப்படும் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு மொத்தம் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 7 மாவட்ட செயலாளர்கள் அந்த பதிவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக அதிமுக, அமமுக மற்றும் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு இந்த உயர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதிலாக அண்ணாதுரை எம்எல்ஏ, தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த இன்ப சேகரனுக்கு பதிலாக அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த வந்த செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் தொகுதி எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் மா.செ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி கடந்த தேர்தலின் போது திமுகவில் இணைந்த மதியழகன் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைப் போல கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த வரதராஜனுக்கு பதிலாக தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராமச்சந்திரனுக்கு பதிலாக தொண்டமுத்தூர் ரவியும், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த மூர்த்திக்கு மாறாக செந்திலும் புதிய மா.செ.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வந்த பூபதிக்கு பதிலாக சந்திரன் அந்த பதவிக்கு வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.