கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக திருமணத்தையே நிறுத்தி வைத்த ஊகான் மருத்துவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் நாளுக்குநாள் காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு மருத்துவர்கள் இரவு பகல் என்றும் பாராமல் சிகிச்சையளித்து வருகின்றனர். அதேநேரத்தில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சில மருத்துவர்களும் இதற்கு பலியாகியுள்ளனர். அந்த வகையில் ஊகான் ஜியாங்ஜியா First People மருத்துவமனையில் பணியாற்றி வரும் 29 வயதான மருத்துவர் பெங் யின்ஹுவா (Peng Yinhua) என்பவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு மரணமடைந்தார். இவர் சுவாச நோய் சிகிச்சை மருத்துவராவார்.
கடந்த 25-ஆம் தேதி அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜின்யின்டான் மருத்துவமனைக்கு கடந்த 30-ஆம் தேதி மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரையும் சேர்த்து சீனாவில் கொரோனாவுக்கு பலியான மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது திருமணத்தையே ‘யின்ஹுவா’ தள்ளிப்போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.