உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 6 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றது. இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியை அளித்து வருகின்றன. இந்த போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகின்றது.
இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் டாலர்களை புதிய அவசர கால ராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புக்காக உக்ரைன் நாட்டிற்கு வழங்குமாறு அமெரிக்க பாராளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிபர் ஜோ பைடனின் வேண்டுகோளை ஏற்று போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவி வழங்கும் வகையில் மேலும் 12 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.