ஐடிஐ மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறையில் பழங்குடியின மக்களுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தர்மபுரியை சேர்ந்த பிரவீன் குமார்(18) என்பவர் படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று காலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் பெருஞ்சூர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புதைமணலில் சிக்கிக்கொண்ட பிரவீன் குமார் காப்பாற்றுமாறு கையை உயர்த்தியுள்ளார். அவரது நண்பர்கள் விளையாட்டாக கையை காட்டுவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக பிரவீன் குமார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டனர். பின்னர் மாணவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரவீன்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதுகுறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.