கடலூர் அருகே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 9 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்த தனது மகனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கில் ஆங்காங்கே விசாரித்து வந்துள்ளார் கிருஷ்ணசாமி. அந்த வகையில்,
அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் நண்பரான ஹரிதாஸ் என்பவர் மூலம் சமரசம் என்பவரின் தொடர்பு கிருஷ்ணசாமிக்கு கிடைத்தது. அவர்கள் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி பொறியாளர் வேலை காலியாக இருக்கிறது. அந்த வேலையை உனது மகனுக்கு வாங்கித் தருகிறோம். அதற்கு பதிலாக ரூபாய் ஒன்பது லட்சம் தரவேண்டும் என்று அவர்கள் கூற இதனை உண்மை என நம்பி கிருஷ்ணசாமி ரூபாய் ஒன்பது லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
இதையடுத்து வேலைக்கான நகலை கொடுத்துவிட்டு அசலை 10 நாட்களுக்கு பிறகு தருவதாக கூறி சென்றனர். ஆனால் வேலையும் தராமல், பணத்தையும் தராமல் இருவரும் ஏமாற்றி வர கடலூர் மாவட்ட காவல் நிலையத்தில் கிருஷ்ணசாமி புகார் அளித்தார். இதையடுத்து மோசடி செய்த இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.