தமிழகம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு மற்றும் ஆண்டுகள் கொண்ட உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து பி.வி.எஸ்சு, ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் இணையவழியில் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து விண்ணப்பம் அவகாசம் கடந்த 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி அக்டோபர் 3ஆம் தேதி வரை மாலை 5 மணி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் அக்டோபர் 3ஆம் தேதி இரவு 8 மணி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 8 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியர்களின் வாரிசுகள், அயல் நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கு இட ஒதுக்கீடு இடங்களுக்கு அக்டோபர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்ப வழிமுறைகள், இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.