அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும் பின் இபிஸுக்கு சாதகமாக வந்தது. அதோடு அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியையும் எடப்பாடியிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கூறிவிட்டது.
இதனால் எடப்பாடியின் கையே அதிமுக கட்சியில் ஓங்கி இருந்தது. இருப்பினும் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இபிஎஸும் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தசரா பண்டிகைக்கு பிறகு பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என்று கூறினார். அதோடு நீங்கள் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும்போது எதற்காக தேர்தலை அவசர அவசரமாக நடத்த நினைக்கிறீர்கள் என்றும் எடப்பாடியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதோடு மெஜாரிட்டி முக்கியமில்லை என்றும் சட்ட ரீதியான அணுகுமுறை தான் முக்கியம் என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது. இதற்கிடையில் பொதுக் குழுவில் கையெழுத்திடப்பட்ட லிஸ்ட்டை தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி கொடுத்தார். அந்த லிஸ்ட்டை பார்த்த தேர்தல் ஆணையம் கட்சியின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறிவிட்டது. மேலும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த உத்தரவுகளால் இபிஎஸ் சருக்கலில் இருக்கிறார்.