சினிமா பாடல் ஆசிரியரான சினேகனுக்கும், சின்னத்திரை நடிகையான ஜெயலெட்சுமிக்கும் இடையில் சினேகம் அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அறக்கட்டளையின் வாயிலாக பணமோசடி செய்ததாக கூறி ஜெயலெட்சுமி மீது சினேகன் புகார் கொடுத்தார். அதன்பின் பதிலுக்கு அது பொய்யான குற்றச்சாட்டு என்று ஜெயலெட்சுமி புகார் அளித்தார். இதனால் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலெட்சுமி, சினேகன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார்.
அதாவது “சினேகம் அறக்கட்டளை வாயிலாக பண மோசடி செய்ததாக சினேகன் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். எவ்வித ஆதாரமும் இன்றி அவர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இதுகுறித்து அவர் என்னிடம் பேச வந்தபோது அவரை நான் தனிமையில் காபி சாப்பிட அழைத்ததாகவும் பொய்கூறி வருகிறார். இதன் காரணமாக நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். ஆகவே நீதி வேண்டி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இப்போது என் மீது பொய் புகார் அளித்ததற்காகவும், அவதூறாக பேசியதற்காகவும் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது சமூகவலைத்தளத்தில் என்னை குறித்து அவதூறாக பேசிவரும் அனைவருக்கும் பொருந்தும்” எனவும் ஜெயலெட்சுமி கூறியுள்ளார்.