தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கடலோரப் பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மூலம் நிலத்தடி நீர் மற்றும் கடல் நீர் மாசடைவதாக செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியானது. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து விசாரணை செய்தது. அந்த விசாரணையின் போது இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல் படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடலோர மீன் வளர்ப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த குழு அளித்த அறிக்கையின்படி இறால் பண்ணைகள் கடலோர மீன் வளர்ப்பு ஆணையம் மற்றும் ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு கடற்கரை பகுதியில் இருந்து 200 மீட்டருக்குள் இறால் பண்ணைகள் செயல்படுவதற்கு ஏற்கனவே தடை இருப்பதால் தடையை மீறி செயல்படும் பண்ணைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமான முறையில் இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் இறால் பண்ணைகள் வழக்கம்போல் செயல்படலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.