பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 24ஆம் தேதி கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதன்பிறகு கருவேல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உபகரணங்கள் வாங்குவதற்காக வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கபடவில்லை.
இதன்பின் அவர்கள் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தார்கள். பின் மதியம் ஒரு மணி அளவில் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரி அங்கிருந்த அலுவலர்களிடம் முற்றுகையிட்டார்கள். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் உபகரணங்கள் வந்திருப்பதாகவும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்கள். ஆனால் அவர்களிடம் தொழிலார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அலுவலக கதவு இழுத்து மூடப்பட்டது. இதன் காரணமாக வெளியே காத்திருந்த தொழிலார்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.