டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற 17-ஆம் தேதி “ராக்தான் அம்ரித் மகோத்சவ்” எனும் பெயரில் தேசிய அளவிலான ரத்ததான இயக்கத்தை மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா துவங்கி வைத்தார். இந்நிலையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்து இருப்பதாகவும், இதன் வாயிலாக இந்தியா புது மைல்கல்லை பதிவுசெய்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளில் துவங்கிய “ராக்தான் அம்ரித் மகோத்சவ்” திட்டத்தின் கீழ் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்து உள்ளனர்.
இம்முயற்சியின் வெற்றி மனிதகுலத்தின் உன்னத நோக்கத்தை பலப்படுத்தி இருக்கிறது. இது பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பெரிதும் உதவும்” என கூறியுள்ளார். முகாமின் முதல் நாளிலேயே 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரத்ததானம் அளித்து புது உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்கான மற்றொரு முயற்சியாக 2025ம் வருடத்திற்குள் காசநோயை ஒழிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான் எனும் திட்டத்தை சென்ற செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கி வைத்தார். இதுவரையிலும் சுமார் 13.5 லட்சம் காசநோயாளிகள் நிக்ஷய் இணையதளத்தில் பதிவுசெய்துள்ளனர்.
நிக்ஷய் இணையதளம் காசநோயில் இருந்து விடுபடுவதற்கு காசநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேம்படுத்தவும், 2025க்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் மற்றும் கார்ப்பரேட் சமூகப்பொறுப்பு (CSR) வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. நிக்ஷய் மித்ராக்கள் எனும் இணையதளத்தில் இதுவரையிலும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவுசெய்து 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட காசநோயாளிகளுக்கு ஆதரவை வழங்க தங்களது அர்ப்பணிப்பைக் காட்டி இருக்கின்றனர்.