கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடியப்பட்டினம் மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் சங்கத்தில் இருக்கும் 250 உறுப்பினர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். உறுப்பினர்கள் சங்கத்திற்கு வழங்கிய 4 சதவீத பணத்தை வங்கியில் வரவு வைப்பது வழக்கம்.
ஆனால் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சங்க பொருளாளரின் கையெழுத்தை போலியாக போட்டு 80 லட்சத்து 55 ஆயிரத்து 728 ரூபாய் பணத்தை கையாடல் செய்து, உறுப்பினர்களின் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்துள்ளார். மேலும் உறுப்பினர்களின் ஓய்வு கால வங்கி கையிருப்பு தொகையிலும் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி நடந்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 2.10 கோடி ரூபாய் பணம் மோசடி நடைபெற்றுள்ளதாக மீன்பிடி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.