கவனமின்மை யின் காரணமாக ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வாலாஜாவில் இருக்கும் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் ஐஸ்வர்யா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. உதயகுமார் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் வாசல் அருகில் தண்ணீர் தொட்டி ஒன்று இருந்துள்ளது. நேற்று மாலை வேளையில் ஒரு வயது மகனை தூங்க வைத்துவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார் ஐஸ்வர்யா. அந்த சமயம் கண்விழித்த குழந்தை தவழ்ந்து தண்ணீர் தொட்டியின் அருகே வந்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.
வீடு திரும்பிய ஐஸ்வர்யா குழந்தையைக் காணாமல் தேடிய பொழுது தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளார் அங்கு சிகிச்சை அளித்தும் எதுவும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து காவேரிபாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.