இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடபாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகைகயின் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். ஒருவரின் வாழ்வில் வீரம், செல்வம், கல்வி மிக முக்கியமானது ஆகும். இந்த மூன்றையும் பெறுவதற்காக தான் நாம் நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுகிறோம். அதோடு முப்பெரும் தேவிகளை வழிபடுவதன் மூலம் நம் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மாறி நேர்மறை எண்ணங்களாக உருவெடுத்து நல்ல பண்புகள் மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க உதவும்.
இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது வீரத்தின் அடையாளமாக திகழும் துர்கா தேவியை நாம் வழிபடுகிறோம். இந்த துர்கா தேவி நம் மனதில் உள்ள எதிர்மனை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை மேம்படுத்த உதவுவாள். அதோடு நம்முடைய முற்பிறவி கர்மாக்கள் நம்மை தொடரும் என்றும் கூறப்படுகிறது. இது நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம். இது அவரவர் வினைகளை பொறுத்து அமையும். இவற்றை தைரியமான மனதுடன் எதிர்கொள்ளும் ஆற்றலை நமக்கு துர்கா தேவி வழங்குவாள். அதன் பிறகு நவராத்திரியின் அடுத்த 3 நாட்களுக்கு நாம் லட்சுமி தேவியை வழிபடுவோம்.
லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளம் என்பதால் அன்னையை வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் செல்வம் பெருகி இன்பம் பொங்கும் என்பது ஐதீகம். இதனையடுத்து நவராத்திரி பண்டிகையின் கடைசி 3 நாட்களில் நாம் சரஸ்வதி தேவியை வழிபடுவோம். அறிவின் உருவமாக திகழும் சரஸ்வதி தேவியை நாம் வழிபட்டால் நமக்கு தூய்மையான ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதைத்தொடர்ந்து நவராத்திரி பண்டிகையின் 10-வது நாள் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய கடைகள் மற்றும் அலுவலகங்களில் பூஜை செய்து தாங்கள் அன்றாடம் வேலைக்காக உபயோகப்படுத்தும் பொருட்களை தேவியின் முன்பு வைத்து வழிபடுவார்கள்.
இதேபோன்று படிக்கும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை சுவாமிக்கு முன்பு வைத்து வழிபடுவார்கள். மேலும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாள் விஜயதசமி என்று அழைக்கப் படுகிறது. இந்த விஜயதசமி நாளில் தான் பெரும்பாலானோர் தங்களுடைய குழந்தைகளை முதல் வகுப்பில் கொண்டு சேர்ப்பார்கள். இந்த நாளில் மகிஷாசுரன் என்ற அரக்கனை துர்கா தேவி வதம் செய்வதாக கூறப்படுவதால் இந்தியாவில் தசரா பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. எனவே நவராத்திரி பண்டிகையின் போது நாம் முப்பெரும் தேவிகளை வணங்கி நம் வாழ்விற்கு தேவையான வீரம், செல்வம், கல்வி போன்றவற்றை பெறுவோம்.