பாஜக கட்சியின் மாநில துணை தலைவர் ஏ.ஜி சம்பத் விழுப்புரத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்த சாமிக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்போம் என்று கூறினார். ஆனால் ஆட்சியில் அமர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்றுவரை மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
அதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக கட்சியின் எம்பி இந்துக்கள் என்றால் வேசி என்கிறார். பேருந்தில் சென்றால் அமைச்சர் ஓசி என்கிறார். எதற்காக இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக்கீட் ஈசி என்று சொல்கிறார்கள். திமுக கட்சியில் முன்பு இருந்த மூத்த தலைவர்கள் இதுபோன்று பேசியதுண்டா. இது போன்ற அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். ஒருவேளை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காவிட்டால் பொதுமக்கள் தேர்தலில் அல்லது போராட்டம் மூலமாக தண்டிப்பார்கள்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் அதை தவறாக பேசுகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது பிரிட்டிஷாரை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இது ஒரு தேசிய இயக்கம். மிகவும் புனிதமான இயக்கம். இதை முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிவரும் காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார். மேலும் முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமிக்கு அவர் மணிமண்டபம் கட்டி அதை திறக்கும்போது அவருடைய மகன் என்ற முறையில் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று கூறினார்.