காங்கிரஸ் கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் இல்லாத நிலை உள்ளது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தாலும் கூட கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான மனு தாக்கல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மனுவை வாபஸ் பெறுவதற்கு அக்டோபர் 8 ஆம் தேதி வரை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தேவைப்பட்டால் அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கும் என்றும் அக்டோபர் 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்கின்ற விதி அமலில் உள்ளதால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை தொடர முடியாது என்பதால் மல்லிகார்ஜுன கார்கே பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகைகார்ஜுன கார்கேவை எதிர்த்து திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் போட்டியிட்டாலும் காங்கிரஸ் தலைமையின் ஆதரவானது கார்கேவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த தலைவர் பதவி கார்கேவுக்கு தான் கிடைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா செய்து விட்டால் அந்த பதவியை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.