லஞ்சம் வாங்கிய வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியசாமி கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கோவிலின் செயல் அலுவலரான லட்சுமி காந்தன் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கொடுப்பதற்கு அண்ணாதுரைக்கு மனம் இல்லாததால் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் போலீசார் அண்ணாதுரையிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து லட்சுமி காந்தனிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி செய்வதற்கு அண்ணாதுரையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் கோவிலின் செயல் அலுவலரான லட்சுமி காந்தன் அண்ணாதுரையிடம் கடந்த 27ஆம் தேதி ரூபாய் 21,000 லஞ்சம் வாங்கிய போது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து போலீசார் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமேஷுக்கு வழங்கவே இந்த பணத்தை வாங்கியதாக லட்சுமி காந்தன் கூறியுள்ளார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ரமேஷ் மற்றும் லட்சுமி காந்தன் இருவரையும் அறநிலையத்துறை ஆணையம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.