இங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் 39 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்குத் தொடர்பாக 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டி பகுதியில் கண்டெய்னர் லாரியில் 39 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்குத்தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 ஆண்களும், 2 பெண்களும் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்றும் ஹாரின் (Ha Tinh) மாகாண போலீசார் தெரிவித்தனர்.
கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கண்டெய்னர் லாரி ஒன்றில் 31 ஆண்களும் 8 பெண்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் வியட்நாமை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் குறித்து எசெக்ஸ் பகுதி போலீசார் தற்போது வியட்நாமில் விசாரணை நடத்தி வருகின்றனர். மூடப்பட்ட கன்டெய்னரில் அதிக வெப்பம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றினால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று பிரிட்டிஷ் போலீசார் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு அயர்லாந்தின் அர்மாக் பகுதியை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மோரிஸ் ரொபின்சன், சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு உதவியதாகவும், அதற்காகப் பணத்தினைப் பெற்றுக்கொண்டதாகவும் குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக மேலும் 3 பேர் பிரிட்டன் போலீசாரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.