காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மாணவர்கள் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய செயல்களில் ஈடுபட மாட்டோம் என தங்களது தந்தைகளிடம் சபதம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா இயக்குனர் ராமதாஸ், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையாரின் பேரன் எஸ்.நடராஜன், எத்திராஜ் கல்லூரி தலைவர் முரளி, நடிகர் ரமேஷ் கண்ணா, வெங்கடாசலம், ஆனந்த கிருஷ்ணன், உதவி இயக்குநர் காந்திமதி, சென்னை மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மாணவர்கள் மொட்டை அடித்து காந்தியைப் போன்று வேடம் அணிந்து விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியபடி அருங்காட்சியக வளாகத்தில் பேரணியாக சென்றனர்.
பின்னர் அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் அமுதப்பெருவிழாவையொட்டி 72 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ராஜேஸ்வரி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார். பின்னர் இது குறித்து சினிமா இயக்குனர் ராமதாஸ் கூறியதாவது. லஞ்சம், மது, ரவுடியிசம் போன்ற அனைத்தும் மகாத்மா காந்திக்கு பிடிக்காதவை. மேலும் இவற்றை நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒலிக்க குழந்தைகளால் மட்டுமே முடியும். இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று அனைத்து பள்ளி குழந்தைகளும் தங்களுடைய தந்தையிடம் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய மூன்று செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று சபதம் செய்து உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறியுள்ளார்.