Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகையின் சிறப்புகள்” கொலு அமைத்தல் மற்றும் நெய்வேத்தியம்….. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை  சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகி உள்ளது. இந்த நவராத்திரி பண்டிகை அக்டோபர் 4-ஆம் தேதி முடிவடையும். இந்த நவராத்திரி பண்டியின் போது கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவார்கள். இந்த கொலு வைக்கும் முறைகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த கொலு பொம்மைகளை வைக்கும் போது படி அமைப்பார்கள். இந்த படி ஒற்றை வரிசையில் இருக்க வேண்டும். ஒரு மனிதன் ஆன்மீக சிந்தனைகளை அடைந்து படிப்படியாக இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் கொலு படிகள் உணர்த்துகிறது. இந்த கொலு பொம்மைகளை கடைசி படியிலிருந்து மேலே மேலே பொம்மைகளை வைக்க வேண்டும்.

அதன்படி முதலில் எல்லாவற்றிற்கும் முழு முதல் கடவுளான வினைகள் தீர்க்கும் விநாயகர் சிலையை மேலே உள்ள முதல் படியில் வைக்க வேண்டும். இந்த கொலு அமைப்பதற்கு 9 படிகளை அமைப்பது மிகவும் சிறப்பு. அதோடு 5, 7, 9 மற்றும் 11 எனவும் படிகளை அமைத்துக் கொள்ளலாம். இதனையடுத்து முதலாம் படியில் ஓரறிவு உயிர்களாக கருதப்படும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளையும், 2-ம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மை களையும், 3-ம் படியில் மூன்றறிவு உயிர்களாக கருதப்படும் எறும்பு, கரையான் போன்றவற்றின் பொம்மைகளையும், 4-ம் படியில் நான்கறிவு உயிர்களாக கருதப்படும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், 5-ம் படியில் ஐந்தறிவு உயிர்களாக கருதப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றின் பொம்மைகளையும் வைக்கலாம்.

இதைத்தொடர்ந்து 6-வது படியில் மனிதர்களின் பொம்மைகளையும், 7-ம் படியில் சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் போன்ற மனித நிலையில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் பொம்மைகளையும், 8-ம் படியில் தேவர்கள், அஷ்டதிக் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் மற்றும் தேவதைகளின் பொம்மைகளையும், 9-ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வ சிலைகளை அவர்களின் தேவிகளோடு இருக்கும் விதமாக பொம்மைகளை வைக்கலாம். மேலும் நவராத்திரியின் 9 நாட்கள் முறையே பிரதமை, துவி திதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி மற்றும் 10-வது நாளில் விஜயதசமி என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது வீட்டில் கொலு வைத்திருக்கும் பெண்கள் தினந்தோறும் விரதம் இருந்து அம்பாளை பூஜை செய்ய வேண்டும். அதோடு விரதம் இருக்கும் பெண்கள் தினந்தோறும் வீடுகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், துணி மற்றும் நாணயம், தாம்பூலம் போன்றவற்றை கொடுத்து அவர்களை பராசக்தியாக பாவித்து வழிபட வேண்டும். இதேபோன்று ஆயுத பூஜை அன்று வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை பார்க்க பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்யலாம்.

அதன் பிறகு விஜயதசமி அன்று குழந்தைகளை முதன் முதலில் பள்ளிக்கு சேர்த்தல், புதிய தொழில் தொடங்குதல் போன்ற அனைத்து விதமான நல்ல காரியங்களுக்கும் பிள்ளையார் சுழி போடலாம். மேலும் தற்போது நவராத்திரி பண்டிகையின் போது நெய்வேத்தியமாக படைக்கக் கூடிய சில உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி முதல் நாளில் பருப்பு வடை, சுண்டல், மொச்சை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், பழம் மற்றும் வெண் பொங்கல் போன்றவற்றை படைத்து வழிபடலாம்.

நவராத்திரி பண்டிகையின் 2-ம் நாளில் எள் சாதம், வேர்க்கடலை சுண்டல், எள் பாயாசம், தயிர் வடை மற்றும் புளியோதரை போன்றவற்றையும், 3-ம் நாளில் காராமணி சுண்டல், கோதுமை சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றையும், 4-ம் நாளில் பட்டாணி சுண்டல், உளுந்த வடை, கதம்ப சாதம், கற்கண்டு பொங்கல், பால் பாயாசம், அவல் கேசரி மற்றும் தயிர் சாதம் போன்றவற்றையும், 5-ம் நாளில் பூம்பருப்பு சுண்டல், பால் சாதம், தயிர் சாதம், பாயாசம், கடலைப்பருப்பு வடை, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றையும் படைத்து வழிபடலாம்.

இதைத்தொடர்ந்து 6-ம் நாளில் கதம்ப சாதம், பச்சை பயறு சுண்டல், மாதுளை, ஆரஞ்சு, தேங்காய் பால் பாயாசம் மற்றும் தேங்காய் சாதம் போன்றவற்றையும், 7-ம் நாளில் புட்டு, பாதாம் முந்திரி பாயாசம், கொண்டைக்கடலை சுண்டல், வெண்பொங்கல், பழ வகைகள் மற்றும் எலுமிச்சை சாதம் போன்றவற்றையும், 8-ம் நாளில் மொச்சை சுண்டல், புளியோதரை, தேங்காய் சாதம் மற்றும் பால் சாதம் போன்றவற்றையும், 9-ம் நாளில் எள் உருண்டை, பொட்டுக்கடலை, கேசரி, எள் பாயாசம், கடலை, வேர்க்கடலை சுண்டல், உளுந்த வடை மற்றும் சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றையும்  படைத்து வழிபடலாம்.

Categories

Tech |