தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தென்மேற்கு பருவ காலம் முடிந்த பின்னரும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையே பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம் மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.