பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையுள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் நன்றாக கவனித்துக் கேளுங்கள். பள்ளி கல்லூரிகள் எல்லாம் நமக்கு அதைத்தான் சொல்லிக் கொடுக்கின்றன.
நாம் படிக்கும் பாடங்கள் எல்லாம் யாரோ ஒருவர் படித்து அதை புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு பாடமாக ஆக்கியதுதான். அவ்வாறு நாம் படிக்கும் பாடங்களை நம் அறிவைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். தற்போது இருக்கும் இந்த வியாபார உலகம் உங்கள் நேரத்தை திருடுவதில் குறியாக இருக்கின்றது. மேலும் இந்த சமூகத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பேசி மற்றவர்களுடன் சண்டையிடலாம் என பொய்யான சுதந்திரத்தை நமக்கு கொடுத்திருக்கின்றது என்றார்.