ஆட்டோ ஓட்டுநரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி சபரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று தன்ராஜ் இரவு நேரத்தில் சவாரி முடித்துவிட்டு மங்கலாபுரம் காலணியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் தன்ராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
உடலில் பல வெட்டுகளை வாங்கிய தன்ராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் தன்ராஜ்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் தன்ராஜ் மனைவியின் தம்பி மளிகை கடை ஒன்று வைத்திருப்பதாகவும் அங்கு மாமுல் கேட்டு ரவுடித்தனம் செய்தவர்களிடம் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.