மெத்தை வியாபாரி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பீர்முகமது இவர் மூவோட்டுக்கோணம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ஆட்டோ மூலம் பல இடங்களுக்கு சென்று மெத்தை விற்பனை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று களியக்கவிலை அருகில் இருக்கும் கோழிவிளை மருதங்கோடு குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர் பீர்முகமது அவரது நண்பர்களும்.
குளத்தில் இறங்கிய பீர்முகமது மறுகரைக்கு செல்ல நீந்தி சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை கண்டு கரையோரம் இருந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டு உள்ளனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குளத்தில் குதித்து பீர்முகமது தேடியுள்ளனர்.
அவர் கிடைக்காததை தொடர்ந்து குழித்துறை தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி பீர்முகமதுவை தேடியுள்ளனர். இரண்டரை மணி நேர தேடுதலுக்கு பின்னர் பீர் முகமது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து களியக்காவிளை காவல்துறையினர் வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு பீர்முகமது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.