மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சிறு நாகலூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செண்பகம்(44) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாற்றுத்திறனாளிகளான முத்திஷ்குமார் என்ற மகனும், ரூபிணி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்டதால் செண்பகம் தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார். இதனால் 8-ஆம் வகுப்பு வரை படித்த தனக்கு கல் சிறு நாகலூர் சத்துணவு மையத்தில் காலியாக இருக்கும் சமையல் வேலையை வழங்குமாறு கடந்த 6 மாதத்திற்கு முன்பு செண்பகம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த செண்பகம் 2 பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு வந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் செண்பகத்தை தடுத்து நிறுத்தி அவர்களை காப்பாற்றினர். இதனை தொடர்ந்து செண்பகம் தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.