சாலையோர கடைகளை அப்புறப்படுத்த முயன்றதால் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டி அமைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடைகளை போடக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தனர்.
இதனால் சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முக்கிய பண்டிகை காலங்களில் கடைகளை போடக்கூடாது என கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஜி.ஆர் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்துக் குள்ளானது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக கடைகளை போட அறிவுறுத்தினார்கள். இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.