Categories
தேசிய செய்திகள்

ஜாமியா பல்கலை., மாணவர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டெல்லி – நொய்டா சாலை மீண்டும் திறப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டெல்லி – நொய்டா சாலை மீண்டும் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடஇந்தியாவில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், புதுவை, கேரளம் ஆகிய இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அந்தந்த மாநில முதல்வர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தது. ஷாகீன்பாக்கில் கடந்த 2 மாதங்களாக பெண்களும், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறத்தியும் ஷாஹின் பாக்கில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. முன்னதாக சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் டெல்லி – நொய்டா சாலை மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இதனால் போராட்டத்தை கையாள தெரியவில்லை என பாஜக மற்றும் காவல்துறையினர் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் டெல்லி – நொய்டா சாலை 69 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

Categories

Tech |