இராவணன் பொம்மையை எரித்த போது அதிலிருந்த பட்டாசுகள் பொதுமக்களை நோக்கி செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஆண்டுதோறும் தசரா பண்டிகை தீமைகளை வென்று தர்மத்தை நிலை நாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் ராவணனை ராமர் கொன்றதை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், லோகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தயாரித்து பின் அவற்றை எரிப்பது வழக்கம். அதேபோல் நேற்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் அமைந்துள்ள கல்லூரி திடலில் ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராவணன் பொம்மைக்குள் பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் நோக்கி வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர்.
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் திகைத்து உள்ளனர். இந்த நிலையில் அந்த கூட்டத்திற்குள் காளை ஒன்று புகுந்து நிலவரத்தை மேலும் கலவரமாக்கியது. இந்நிலையில் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி காளையை அங்கிருந்து பிடித்து சென்றுள்ளனர். அதன் பின்னர் பொதுமக்கள் அமைதியாக நின்று பொம்மை எரிக்கும் காட்சியை பார்த்துள்ளனர். இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.