வறுமையைக் குறைப்பதற்கு 3 தசாப்த காலமாக எடுக்கப்பட்ட முன்னேற்றங்கள் பாதிப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் கொரோனா நோய் தொற்று தாக்கம் போன்றவற்றால் 2030-க்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நீண்ட கால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இதனால் வறுமையைக் குறைப்பதற்கு 3 தசாப்த காலமாக எடுக்கப்பட்ட முன்னேற்றங்கள் பாதிப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கடந்த 2020-ல் மொத்தம் 7 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 719 மில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் சுமார் 9.3 % பேர் நாளொன்றுக்கு 2.15 டாலர் மட்டுமே செலவு செய்து வாழ்கின்றனர். இச்சூழ்நிலையை மாற்றுவதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கி நீண்டகால வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பரந்த மானியங்களைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ள உலக வங்கி ஏழை மக்களைப் பாதிக்காமல் வருவாயை உயர்த்த உதவும் சொத்துவரி மற்றும் கார்பன்வரி ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.